ஓவியர்களுக்கு தேசிய விருது
ஸ்ரீ தர்ஷினி கலைக்கூடம் (சூளைமேடு, சென்னை) சார்பில் 21ஆம் ஆண்டு ஓவியர்களுக்கான தேசிய விருது வழங்கும் விழா ஏப்ரல் 4ந் தேதி சிறப்பாக நடைபெற்றது. இந்த தேசிய அளவிலான கலை விழாவில், இந்தியாவின் 21 மாநிலங்களில் இருந்து 255-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று தங்கள் படைப்புகளை வெளிப்படுத்தினர். கலை, கலாச்சாரம் மற்றும் இளம் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கண்காட்சியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 260 ஓவியர்களின் மொத்தம் 350 ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவ்வோவியங்களின் மொத்த மதிப்பு ரூ. 2 கோடியே 45 லட்சம் என தெரிவிக்கப்பட்டது.
மரபு, உயிர் மற்றும் நவீன ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் நெய் வண்ணம், நீர் வண்ணம் மற்றும் கலவை ஓவியங்கள், தஞ்சாவூர் மற்றும் மைசூர் ஓவியங்கள், பழங்குடியின ஓவியங்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இதனுடன் காகிதம், சுதை, உலோகம், மரம் மற்றும் கல் ஆகியவற்றில் செய்யப்பட்ட புடைப்பு சிற்பங்கள், பீங்கான் பொம்மைகள் உள்ளிட்ட பன்முகக் கலைப் படைப்புகளும் பார்வையாளர்களை கவர்ந்தன. நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினர்களாக செவாலியர் டாக்டர் வி.ஜி. சந்தோஷம் (VGP குழும தலைவர்), டாக்டர் அவ்வை என். அருள் (தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர்), நக்கீரன் கோபால் (பத்திரிகையாளர் மற்றும் ஆசிரியர்), சக்தி பி. பாஸ்கரன் (நக்கீரர் தமிழ் சங்கம் இணை செயலாளர்) மற்றும் முன்னாள் துணை ஆட்சியர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நக்கீரன் கோபால் அவர்கள், ஓவியத்துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் தாக்கம் மற்றும் இத்துறையில் உருவாகி வரும் தொழில் வாய்ப்புகள் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்தார். டாக்டர் அவ்வை என். அருள் அவர்கள் பேசுகையில், அரசின் சார்பிலும் கலை மற்றும் பண்பாட்டு துறை சார்பிலும், குறிப்பாக தமிழ் வளர்ச்சி துறை சார்பிலும் ஓவியத்துறைக்கு அதிகப்படியான முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், தனது பள்ளிக் காலங்களில் ஓவியப் பாடம் முக்கியப் பாடமாக இருந்ததை நினைவு கூர்ந்தார். செவாலியர் டாக்டர் வி.ஜி. சந்தோஷம் அவர்கள், ஸ்ரீ தர்ஷினி கலைக்கூடத்திற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த விழாவில் பல்வேறு கலைப் பிரிவுகளில் சிறந்து விளங்கிய கலைஞர்கள் பாராட்டப்பட்டு பொற்கிழியுடன் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், ஸ்ரீ தர்ஷினி கலைக்கூடத்தின் நிறுவனர் திரு. தர்மலிங்கம் கலந்து கொண்டு நன்றி உரையாற்றினார்.











Leave a Reply