மே தினம் கொண்டாடிய மேதை

Article By: Sumathi Hari, Social Activist, Mangala Nagar, Porur.

இந்த ஆண்டு கொண்டாடப்படும் “மே தினம்” இந்திய வரலாற்றில் 102 வது மே தினமாகும். மே தினத்தை இந்தியாவில், நம் தமிழ்நாட்டில், சென்னையில் முதன்முறையாக அறிமுகப்படுத்திய மாமனிதர் சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இந்திய தேசிய தலைவர்களிலும், சிந்தனையாளர்களிலும், சிந்தனைச்சிற்பி ம. சிங்காரவேலர் தனிச்சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுகின்றார். அரசியல் அறிவுக்களத்தில் அவர் பங்களிப்பு ஈடு இணையற்றது. மக்களிடையே மண்டியிருந்த அறியாமையும், மூடநம்பிக்கைகளையும் ,சாதி ,மதப் போக்குகளையும், அடியோடு களைய, எழுதியும், பேசியும், செயலாற்றியும் வந்தவர் சிங்காரவேலர்.
உலகநாடுகள் மே தினத்தை உன்னதமான நாளாக மதிக்கின்றன. இந்தியா இந்த நாளை ஊதியத்துடன் கூடிய நாளாக அறிவித்துள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் 1923 ஆம் ஆண்டு மே தினம் சென்னையில் முதன்முறையாக மேதின பூங்காவில் செங்கொடி ஏற்றி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. சிந்தனைச்சிற்பி ம. சிங்காரவேலர் தன்னலமற்ற மனித நேயர், முதல் தொழிலாளர் தினம் கொண்டாடியவர், தொழிலாளியை முதன்முறையாக “தோழர்” என அழைத்தவர், செங்கொடியை ஏற்றியவர். மாநகராட்சிப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மதிய உணவு பெறுவதைச் செயல்படுத்தியவர், ஆங்கிலேயர் ஆட்சியில் சிறைவாசம் அனுபவித்த வழக்கறிஞர். “என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்”  என்னும் மகாகவி பாரதியின் வரிகளை இளம் சிறார்களை பாடும்படிச்செய்து விடுதலை வேட்கையை ஊட்டினார்.
இம்மாமனிதரைப் பற்றி எழுதியும், பேசியும், செயலாற்றியும்,உலகறியச் செய்தவர் பேராசிரியர் டாக்டர் முத்து.குணசேகரன் அவர்கள். இக்கட்டுரையின் சாராம்சம் அனைத்தும் பேராசிரியர் டாக்டர் முத்து.குணசேகரன் எழுதிய “மே நாள் கண்ட மேதை சிங்காரவேலர் ” என்ற புத்தகத்திலிருந்து எழுதப்பட்ட கருத்துக்களாகும்.
அனைத்து தொழிலாளர் தோழர்களுக்கும் இனிய மேதின நல்வாழ்த்துக்கள்.

2 Responses to மே தினம் கொண்டாடிய மேதை

  1. Subramanian B says:

    சமுக செயற்பட்டாளர் திருமதி சுமதி ஹரி அவர்களுக்கு வாழ்த்துகள்.

  2. Subramanian B says:

    சமுக செயற்பாட்டாளர் திருமதி சுமதி ஹரி அவர்களுக்கு வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *